கோவை, திருப்பூர், நீலகிரி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ். அப்போது, அதிமுக ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.அதிமுக சார்பில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கொடிசியா அருகேயுள்ள, தனியார் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 30க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார். அப்போது இபிஎஸ் பேசியதாவது:தமிழகத்தில் விளையாட்டு என்பது முக்கிய அங்கமாகும். உடல் நலம் மேம்படவும், மன அழுத்தம் குறையவும், உடலை காக்கவும் விளையாட்டு முக்கியம்.விளையாட்டு வீரர்கள் எவ்வளவு சோதனை வந்தாலும், அதை தாங்கும் மனநிலை உள்ளவர்கள். அதிமுக ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உபகரணங்களும் கிடைக்க நாங்கள் பாடுபட்டோம். அதிமுக ஆட்சியில், விளையாட்டு வீரர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலை கிடைத்திட 3 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். மேலும், எங்களது ஆட்சியில் முதல்வர் கோப்பை அறிவிப்பை வெளியிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சர்வதேச அளவுக்கு வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள விளையாட்டு விடுதி கட்டிக் கொடுத்தோம். ஊட்டச்சத்துக்கான தொகையை 3 மடங்காக உயர்த்தி வழங்கினோம். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது.வீரர்களுக்கு எந்தெந்த விளையாட்டு உபகரணங்கள் தேவையோ, அது வழங்கப்படும். அதிமுகவில் உள்ள விளையாட்டு அணியில் இளைஞர்கள் பங்கு பெற்று தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும். திறமையுள்ள வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிமுக செய்யும்.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.