தஞ்சாவூர் மாவட்டத்தில், 1.5 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்த நிலையில், மழையில் நனைந்து மிதக்கும் நெல் மணிகளால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், தற்போது குறுவை அறுவடை பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, விற்பனை செய்வதற்காக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வந்து, கொட்டி வைத்து வருகின்றனர். இந்நிலையில், வாளமர்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு அறுவடை செய்த நெல்லுடன் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இரவு பகலாக காத்துக் கிடக்கின்றனர். அங்கு ஏற்கனவே கொள்முதல் செய்த நெல்லை சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பாமல் இருப்பதால், கொள்முதல் செய்யும் பணி தாமதமாக நடைபெற்று வருவதாகவும், இதனால் 10 நாட்களாக நெல்லை காவல் காப்பது, உலர வைப்பது என தங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தொடர் மழையால், நெல்மணிகள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைத்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கொள்முதல் செய்த நெல்லை உடனடியாக சேமிப்பு கிடங்கிற்கு அனுப்ப வேண்டும், விவசாயிகள் கொண்டு வந்து நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.