தீயணைப்புத் துறை சார்பில், 10ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கித் தவித்த இருவரை, ஸ்கை லிப்ட் மூலம் பாதுகாப்பாக மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி, மெய் சிலிர்க்க வைத்தது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே, ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள சிறுசேரி சிப்காட் அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மொத்தம் 18 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 10ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், இருவர் பால்கனியில் சிக்கிக் கொண்டதாகவும், தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்புவாசி ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனே ஸ்கை லிப்ட் உள்ளிட்ட மூன்று தீயணைப்பு வாகனத்தில் சுமார் 40 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். பின்னர், 10ஆவது மாடியில் சிக்கி இருந்த இருவரை தீயணைப்பு வீரர்கள் ஸ்கை லிப்ட் மூலம் பாதுகாப்பாக மீட்டு தரைக்கு கொண்டு வந்தனர். மேலும், சுமார் 30 அடி உயரத்தில் ஒருவர் சிக்கிக் கொண்ட நிலையில், கயிறு மூலம் மீட்பது, மற்றொருவரை ஏணி மூலம் எப்படி மீட்பது என்று செய்து காண்பித்து ஒத்திகையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், உதவி மாவட்ட அலுவலர் செந்தில்குமரன், நிலைய அலுவலர் வீரராகவன் ஆகியோர் மீட்பு குழுவினருடன் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் மீட்பு பணிகளை செய்து காட்டி, பாராட்டை பெற்றனர்.