சாலையில் திடீரென்று இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் வேகமாக வந்ததில் விபத்து ஏற்பட்ட உடனே அங்கு ஓடோடி வந்த காவல்துறையினர் இளைஞர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், கடைசியில் எதிர்பாராத ட்விஸ்ட் நடந்துள்ளது. நெல்லை மாநகர காவல் துறை மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் நாளைய தினம் போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்அதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஒத்திகை நிகழ்வுகள் திடீரென சாலையில் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் நபர்களின் கூட்டமும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் நெருக்கடியும் மாலை நேரங்களில் அதிகரித்து காணப்படும்.அந்நேரத்தில் திடீரென சாலையில் சென்ற மாணவர்கள் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்த நிலையில் அங்கிருந்த காவலர்கள் ஓடி வந்து மாணவர்களை தூக்கிச் செல்லும் நிகழ்வும், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவர்களை காப்பாற்றி கொண்டு செல்லும் நிகழ்வும் அரங்கேறியுள்ளது. இதனை அங்கு சென்றவர்கள் பரபரப்பாக பார்த்து வந்த நிலையில் பெரும் விபத்து ஏற்பட்டது என்ற எண்ணத்தில் அனைவரும் சோகத்துடன் இருந்த சூழலில் பாதி தூரம் சென்ற ஆம்புலன்ஸ் நிற்கவே, அதிலிருந்து மாணவர்கள் மீண்டும் இறங்கி விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.அப்போதுதான் காவல்துறையினர் போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையிலும், போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும், அதில் ஒரு அங்கமாக நடைபெறும் நாடகத்திற்கான ஒத்திகை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பாக இருந்த அப்பகுதி பதட்டம் தணிந்து காணப்பட்டது.