திருப்பூரில், சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில், அட்டூழியம் செய்வதாக, பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பின்னலாடை தொழில் நகரமாக அறியப்படும் திருப்பூர், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து பணிபுரியும் நகரம். பீகார், ஒரிசா, ஜார்கண்ட் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களில் பெருமளவில் வேலை செய்து வருகின்றனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடும் ஆர்வத்தில், இந்த தொழிலாளர்கள் திருப்பூரிலிருந்து தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், திருப்பூர் ரயில் நிலையம் முழுவதும், வட மாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையம் முழுவதும் அதிகப்படியான கூட்டம் இருந்தது. பாட்னா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஏறியிருந்தனர். ஆனால், அதில் S5 என்ற ஸ்லீப்பர் பெட்டியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பெட்டியில் பயணம் செய்த ஒருவர் பதிவு செய்த வீடியோவில் கூறி இருப்பதாவது: நாங்கள் மொத்தம் 13 பேர், எர்ணாகுளத்தில் இருந்து காட்பாடி வரை சரியாக டிக்கெட் புக் செய்து வந்தோம். ஆனால், திருப்பூர் வந்தவுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்கள் பெட்டியில் டிக்கெட் இல்லாமலேயே ஏறி வந்தனர். எல்லோரும் ஓபன் டிக்கெட் எடுத்து ஏறியவர்கள் தான். இதனால் நாங்கள் உட்கார முடியவில்லை, உறங்க முடியவில்லை. கழிவறை போகவே முடியவில்லை. பான் பராக் சாப்பிட்டு பெட்டிக்குள் அசுத்தம் செய்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் பயணிக்கும் குடும்பங்களும் பெரும் அவதி அடைந்தனர். இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்களிடம் முறையிட்ட போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லுங்கள் என்ற மாதிரி அலட்சியமாகவே பதில் அளித்தனர். இவ்வாறு பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆனால், டிக்கெட் பரிசோதகர் கூறும் போது, "அனைவரிடமும் டிக்கெட் உள்ளது. முன்பதிவு செய்யாதவர்களிடம் அபராதம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. புகார் அளிக்க வேண்டுமானால் 139 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்" என்று பதிலளித்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.