பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் சூக்லாம்பட்டி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 5 கிமீ நடந்தே சென்று வருகின்றனர். திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைரிசெட்டிபாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள சூக்லாம்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமம் கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அத்தியாவசிய பொருள், மருத்துவ உதவி போன்ற தேவைகளுக்காக நாகநல்லூர் செல்ல வேண்டிய சூழ்நிலையில், பேருந்து வசதி இல்லாததால் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர்கள் தினமும் 5 கிமீ தூரம் நடந்தே பள்ளி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதில் சுமார் 3 கிமீ தூரம் வனப்பகுதியாக இருப்பதால், அச்சத்துடன் குழந்தைகள் சென்று வருகின்றனர். எனவே, உடனடியாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.