சென்னை அருகே மாதவரத்தில் மாடு முட்டி பால் பாக்கெட் விநியோகம் செய்யும் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புகாரின்பேரில் சாலைகளில் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் செல்லவே, அதன் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...சென்னை மாநகராட்சி பகுதியில் மாடுகள் இல்லாத சாலைகளே இல்லை எனலாம். அதிகாலையில் பால் கறந்ததும் மாடுகளை வீதியில் அவிழ்த்து விடும் உரிமையாளர்கள், மாலையில் மீண்டும் பால் கறக்கும்போது தான் வந்து வீடுகளுக்கு ஓட்டிச் செல்வர். அதுவரை இந்த மாடுகள், தெருக்களில் வசிக்கும் மக்கள் கொடுக்கும் உணவுகளையும், வீதிகளில் ஆங்காங்கே வீசப்படும் உணவுகளையும் உண்டுவிட்டு, சாலைகள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ளும்.சாலைகளில் கூட்டம் கூட்டமாக திரியும் இந்த மாடுகள், ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களையும், டூவீலர்களில் செல்பவர்களையும் முட்டித் தள்ளும் சம்பவங்கள் நாள்தோறும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன. இதில், அவ்வப்போது சில உயிரிழப்புகளும் ஏற்படுவது தான் வேதனை. மாநகர சாலைகளில் கட்டுப்பாடின்றி திரியும் இதுபோன்ற மாடுகளால், விபத்துகள் நேரிடாத நாட்களே இல்லை என்றால் மிகையாகாது.எனவே, சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் அல்லது கோசாலைகளில் அடைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்த கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்றுவரை இருந்து வருகிறது. விபத்து நேரிடும்போது மட்டும் மாடுகளை பிடிப்பதுபோல் சீன்போடும் மாநகராட்சி நிர்வாகம், மறுநாளே மறந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.இதனால் தான், மாநகரில் மீண்டும் ஒரு உயிரிழப்பை சந்திக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மாதவரம் அருகே மாத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மாடு முட்டி முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார். வீடுகளுக்கு தினமும் காலையில் பால் சப்ளை செய்யும் 79 வயது முதியவர் ஆனந்த் சைன், வழக்கமான பணிகளை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார்.இந்த சமயத்தில், அப்பகுதியில் உலாவிய குதிரையும், மாடும் உணவிற்கான சண்டையிட்டுக் கொண்டதில், குதிரையின் அட்டாக்கை தாங்க முடியாத மாடு, தலைதெறிக்க ஓடியுள்ளது. அப்போது, எதிரே சைக்கிளில் வந்த பால் வியாபாரி ஆனந்த் சைனை முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து, மணலி பகுதி மாநகராட்சி ஊழியர்கள், முதியவரை முட்டிய மாடு உட்பட சாலையில் திரிந்த சில மாடுகளை பிடித்தனர். அப்போது அங்கு வந்த மாட்டின் உரிமையாளர், தனது மாட்டை பிடிக்கக்கூடாது என வாக்குவாதம் செய்தார். எனினும், அதனை பொருட்படுத்தாத மாநகராட்சி ஊழியர்கள் மாட்டை பிடித்து வாகனத்தில் ஏற்றி, கோசாலைக்கு கொண்டு சென்றனர்.இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய ஆனந்த் சைனின் மகன் டில்லிபாபு, மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகப்போகிறதோ என வேதனையுடன் கூறினார்.இதுகுறித்து பேசிய லோக்கல் வாசி ஒருவர், மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் வைக்காததால் பொதுமக்கள் சாலையோரங்களில் மீந்த உணவு உள்ளிட்டவற்றை வீசிச் செல்வதாகவும், இதனை உண்ண வரும் மாடுகளுக்குள் சண்டை ஏற்பட்டு விபத்து நேரிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.