நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியினை புனிதம் செய்து கொடி பவனியை தொடங்கி வைத்தார். கொடி பவனியானது பேராலய முகப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பேராலய முகப்பில் உள்ள கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ’மரியே வாழ்க, ஆவே மரியா’ என்று முழக்கமிட்டு மனமுருகி பிரார்த்தனை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த பேராலயத் திருவிழாவை காண வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை பெசன்ட்நகரிலும் கொடியேற்றம்:சென்னை, பெசன்ட் நகரில் உள்ள புகழ்பெற்ற ’குட்டி வேளாங்கண்ணி’ என்று அழைக்கப்படும் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 52ஆம் ஆண்டு திருவிழாவில், இன்று ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டுத் திருப்பலியும் கோலாகலமாகத் துவங்கியது.