தருமபுரம் ஆதீனம் மணி விழா மாநாட்டில், இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, ஆதீனகர்த்தாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக, தஞ்சாவூர், கும்பகோணத்தை சேர்ந்த ஜமாத்தார்கள், முத்தவல்லிகள் மற்றும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள், தருமபுரம் ஆதீனத்தின் மணிவிழா மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில், நவம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மணி விழாவை முன்னிட்டு, மணி விழா மாநாட்டு நிகழ்வு, கடந்த 1ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த முஸ்லிம் ஜமாத்தார்கள், முத்தவல்லிகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் வருகை தந்து, தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து, அவரிடம் அருளாசி பெற்றனர். ஆதீன மடாதிபதியிடம் இஸ்லாமியர்கள் அருளாசி பெற்றது மத நல்லிணக்கத்தை போற்றும் நிகழ்வாக அமைந்தது.