மயிலாடுதுறை மாவட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். டெல்டா பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடந்து வருகிறது. மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளில் 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 1ஆம் தேதி முதல், கொள்முதல் பணி தொடங்கினாலும், விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டுவந்து அடுக்கி வைத்து கொண்டு இரவு பகலாக காவல்காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்த நெல்லை மழையில் இருந்து பாதுகாப்பதற்குள், விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குடோன்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பாமல் தேங்கி கிடப்பதாலும் புதிதாக கொள்முதல் செய்ய தாமதம் ஏற்படுவதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக எடமணல், மாணிக்கபங்கு, மயிலாடுதுறை எம்ஆர்எம் மில், சித்தர்காடு குடோன், எருக்கூர் மில் ஆகிய இடங்களுக்கு அரவைக்கு ரயில் மூலம் ஏற்றி அனுப்பி வைத்தும், மழைக்கு முன் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.