தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெற்றோர் நன்றாக படிக்க வேண்டும் என்று கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 10ஆம் வகுப்பு மாணவனை, போலீசார் 4 நாட்களுக்கு பின்னர் மீட்டனர். தெற்கு முத்தாலபுரம் எனும் கருப்பசாமி கோவில்பட்டியை சேர்ந்த முனியசாமி - முத்துலட்சுமி தம்பதியரின் மூத்த மகன் ஆனந்தராஜ், பேரிலோவன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பாததால், பள்ளியை தொடர்பு கொண்டு கேட்ட போது 2 நாட்களாகவே பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து புகாரளித்ததன் பேரில் 2 தனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார், கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்த மாணவனை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.