வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்பி கதிர் ஆனந்த் வசிக்கக்கூடிய இல்லத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவலையடுத்து அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ரீட்டா உதவியுடன் 5க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வந்த, வெடிகுண்டு மிரட்டலில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து, 1 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல், வதந்தி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து சோதனையை, போலீசார் முடித்து விட்டுச் சென்றனர்.