விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசிப் பெருவிழாவின் ஐந்தாம் நாளில், தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அக்னி குளத்திலிருந்து வீதி உலா வந்த அம்மனுக்கு, கோவில் வடக்கு வாசல் எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னிகுண்டம் அருகே மகா தீபாராதனை நடைபெற்றது. கோவில் பூசாரிகள் முதலில் குண்டத்தில் இறங்கிய நிலையில், கடந்த 7 நாட்களாக காப்புக் கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர்.