ஈரோடு ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர், தண்டவாளத்துக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்ட நிலையில், பொது மக்களும், ரயில்வே பாதுகாப்பு போலீசாரும் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மதுரையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் நடைமேடையில் உள்ள கடையொன்றில் உணவை வாங்கிவிட்டு, ரயிலில் ஏற முயன்ற நிலையில் சிக்கிக் கொண்டார். அப்போது அவரை காப்பாற்றிய போலீசார், மீண்டும் அதே ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். கன்னியாகுமரியில் இருந்து, பெங்களூரு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நள்ளிரவு ஒன்றரை மணி அளவில், ஈரோடு ரயில் நிலையம் நடைமேடை இரண்டில் வந்த போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தால், 10 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு போலீசாரின் துரித முயற்சியால், பயணி பத்திரமாக மீட்கப்பட்டது, அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளது.