திருப்பூரில் அனுமதி மற்றும் உரிமம் இன்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில், ஒரு ஆண், 9 மாத பெண் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சத்யா காலனி பொன்னம்மாள் நகர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது மனைவி சத்யபிரியா உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சத்யபிரியாவின் சகோதரர் சரவணகுமார், ஈரோட்டில் கோவில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயார் செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். திருவிழா காலம் என்பதால் அதிகளவிலான ஆர்டர்கள் இவருக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சகோதரியான சத்திய பிரியாவின் வீட்டில் வைத்து கூடுதலாக பட்டாசு தயாரிக்கும் பணியை இவர் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென நாட்டு வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்து வந்த ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர், ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.