பிரதான சாலைகளில், பெருக்கெடுத்து ஓடிய பாதாள சாக்கடை கழிவு நீர், சாலை ஓரத்தில் தேங்கியதால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பிரதான சாலையான காமராஜர் சாலையில், பழைய நகராட்சி அலுவலகம் அருகில், பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி, சாலைகளில் ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதி அடைந்தனர். துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் பிரதான சாலைகளில் உள்ள கடைவீதிகளுக்கு பொதுமக்கள் சென்று வர இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.