திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றுவதற்கு இந்து முன்னணியினரை காவல்துறையினர் அனுமதிக்காத நிலையில், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தனி நீதிபதியின் உத்தரவை சிறிதும் பொருட்படுத்தாத காவல்துறையினர், நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளதால் மலைமீது ஏற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற இரண்டாவது முறையாக தனி நீதிபதி உத்தரவிட்ட போதிலும், காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டதால் தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது.உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்ததுடன், தீபத்தூணில் மாலை ஏழு மணிக்குள்ளாக தீபமேற்ற வேண்டுமென மீண்டும் ஒருமுறை உத்தரவை பிறப்பித்திருந்தார். இதையடுத்து, இந்து முன்னணியினரும் பாரதிய ஜனதா கட்சியினரும் முருகன் கோயில் அருகே குழுமத் தொடங்கினர். போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டு பேரிகார்டுகள் போடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.இதனிடையே மலை உச்சி பகுதியில் தீபமேற்றுவதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியினரின் வாகன அணிவகுப்புடன் வந்துகொண்டிருந்தார். இதையறிந்த காவல்துறையினர், 16 கால் மண்டபம் பகுதியிலேயே நயினார் நாகேந்திரனை தடுத்து நிறுத்தினர். அப்போது, காவல்துறையினருடன் பாஜக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகரித்தது. நேரமாக நேரமாக போலீசாரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது.நீதிமன்றத்தின் தீர்ப்பை பெற்றுக் கொண்டு மனுதாரர் கோயிலை அடைந்ததும், அங்கிருந்த இந்து முன்னணியினர் கைகளை தட்டி, ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். தொடர்ந்து இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார், மலை உச்சியில் தீபமேற்ற பரபரத்தபடி நடந்து சென்றார். தீபத்தை ஏற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் சென்ற அவரையும் அவரது சகாக்களையும் மதுரை துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாராம்சத்தை விளக்கி கூறிய போதும் அதை ஏற்காது இனிகோ திவ்யன், காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை யாரையும் தீபமேற்ற அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மனுதாரர் நிகழ்விடத்துக்கு முன்பே ஆயிரக்கணக்கானோர் இங்கு குவிந்தது எப்படி என இந்து முன்னணியினரிடம் இனிகோ திவ்யன் கேள்வி எழுப்பினார். இந்து முன்னணியினரும் மனுதாரரும் எவ்வளவோ பேசி பார்த்தும் போலீசார் அனுமதி மறுத்ததால் அங்கிருந்தவர்கள் கோஷம் போட தொடங்கினர்.விண்ணதிர முழக்கங்களுக்கு மத்தியில் அந்த பகுதிக்கு வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் காவல்துறை உயரதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சுற்றியிருந்தவர்கள் துணை ஆணையரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டாலும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது தனது கடமை என இனிகோ திவ்யன் தெரிவித்தார். ஆனால், ஆணையர் லோகநாதன் நேரில் வராமல் இழுத்தடிப்பதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர்.இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனால், அந்த பகுதி முழுக்கவும் நிலைமை அசாதாரணமான நிலைக்கு சென்றது. காவல்துறை வாகனத்துக்கு முன்னே பெண்கள் அமர்ந்து போலீசாருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் பலரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.காவல் ஆணையர் வந்தே ஆகவேண்டும் என மனுதாரரும் ஏனைய இந்து முன்னணியினரும் அடம்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் தொடர் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஓய்ந்தபாடில்லை. ஒருவழியாக எஞ்சியவர்களையும் காவல்துறையினர் களேபரத்துக்கு மத்தியில் கைது செய்து அழைத்து சென்றனர்.இறுதியாக காவல் ஆணையருக்காக காத்திருந்த இந்துமுன்னணியை சேர்ந்த ராம ரவிக்குமாரும் அவரது சகாக்களுமே நேரமாகிவிட்டது இனி நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம் என முடிவெடுத்துவிட்டு நடையை கட்டினார்.