பருவ மழையை எதிர்கொள்ள, சென்னை மாநகராட்சி தயாராக உள்ளதாக, மேயர் பிரியா தெரிவித்தார். இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது: வட கிழக்கு பருவ மழை, வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், மழை பெய்தால் தான் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரிவிக்க முடியும். இந்த மழைக் காலங்களில் தாழ்வான மற்றும் மழை நீர் தேங்கக் கூடிய பகுதிகளில் உள்ள பொது மக்களை சமூதாய நலக் கூடங்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக, முன்னதாக சமுதாய நலக் கூடங்களை முன்பதிவு செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம். இதில், பொது மக்களை பள்ளிகளில் தங்க வைத்தால், மாணவர்களின் கல்வி கற்கும் நிலை பாதிக்கப்படும் என்பதற்காக, சமுதாய நலக் கூடங்களை தேர்வு செய்துள்ளோம். சமுதாய நலக் கூடங்கள் போதாத பட்சத்தில் ஒரு சில பள்ளிகளில் பொது மக்கள் தங்க வைக்கப்படுவர். மழைக் காலம் தொடங்க உள்ளதால், சென்னையில், சாலை கட்டமைப்பு பணிகளை நிறுத்துமாறு மெட்ரோ உள்ளிட்ட நிர்வாகங்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.ஜனவரி மாதம் மழைக் காலம் முடிந்த பின்னர், சாலை கட்டமைப்பை தொடங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், முக்கியமான மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, கூடுதலாக நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் மாமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவர்களது வார்டு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மீன்வளத்துறை சார்பில் படகுகள் ஏற்பாடு செய்யப்படும். கடந்த ஆண்டு மாநகராட்சி சார்பில் படகுகள் வாங்கப்பட்டு மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.இந்தப் படகுகள், மழைக் காலங்களில் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்ட படகுகள் மட்டுமின்றி கூடுதலாக படகுகள் தேவைப்பட்டால் அதனை, மீனவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து விவகாரங்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல், அனைவரும் களத்தில் நின்று வருகின்றனர். இதில், களத்தில் நிற்கவில்லை என்று, எதிர்க்கட்சிகள் பொதுவாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.சென்னை மாநகராட்சி பள்ளிகளின் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்கு 5 நிமிடம் குடிநீர் இடைவேளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் நீர் இழப்பால் சோர்வடைவதை தடுப்பதற்காக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக 1,000 மாணவர்களுக்கு மேல் பயிலும், சுமார் 16 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 500 மாணவர்களுக்கு மேல் பயிலும் 35 பள்ளிகள் கண்டறியப்பட்டு இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதே போல, படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் இடைவேளை திட்டம் தொடங்கி வைக்கப்படும். இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.