சொகுசு காரின் முன் பகுதியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை, சுமார் 1 கிமீ தூரம் இழுத்துச்சென்ற சிசிடிவி காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, வேலுரிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற சொகுசு கார், சுமார் 1 கிமீ தூரம் தேசிய நெடுஞ்சாலையில், முன்பகுதியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை தரதரவென இழுத்து சென்றதால், வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அச்சமடைந்தனர். வாலாஜாபேட்டை டோல்கேட் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த 3 இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் காரின் முன்பக்க அடிப்பாகத்தில் சிக்கியது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல், வாலாஜா டோல்கேட்டிலும் நிற்காமல், கார் ஓட்டுநர் காரை இயக்கி சுமார் 1 கிமீ தூரத்திற்கு, சிக்கிய இரு சக்கர வாகனத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து கார் ஓட்டுநர் தப்பி சென்று விட்டார். இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர். வாலாஜாப்பேட்டை போலீசார் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.