இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவரின் உள்ளங்கையிலும் செல்போன் புகுந்து விளையாடும் நிலையில், திண்டுக்கல் அருகே உள்ள பாலாறு அணை பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் செல்போனை பொம்மை செல்போன் போன்று விளையாடும் நிலையில் உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். விபத்தின்போது 108 ஆம்புலன்ஸைகூட அழைக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ள மக்கள், செல்போன் டவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சினிமா காட்சிக்கும், பாலாறு அணைப்பகுதியில் முதியவர் மரத்தில் ஏறி செல்போனில் பேசும் காட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆள்தான் மாறி இருக்கிறார்களே தவிர காட்சியில் எந்த மாற்றமும் இல்லை.பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றில் பயணிக்க டிக்கெட் எடுப்பதுமுதல் இருந்த இடத்திலேயே அமர்ந்து உணவருந்தும் அளவுக்கு செல்போன் தான் ஒவ்வொருவரின் உள்ளங்கையிலும் புகுந்து விளையாடுகிறது.சிறுகுழந்தைகளே செல்போனை சுலபமாக இயக்கும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற காலம்போய் வீட்டுக்கு வீடு ஆண்ட்ராய்டு போன் என்றுதான் தற்போதைய காலகட்டம் உள்ளது.இப்படிப்பட்ட காலத்தில், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு பகுதியில் வசிக்கும் பலரிடம் செல்போன் பெயருக்கு மட்டுமே இருப்பது ஆச்சரியமாக தான் உள்ளது. டவர் இல்லாவிட்டால் அவர்களும் என்னதான் செய்வார்கள். பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிதான் பாலாறு அணை. மாவட்டத்திலேயே மிகப்பெரிய அணை இதுதான். இந்த அணையையொட்டி 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.இந்த பாலாறு அணைப்பகுதியில் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன், ஜியோ என எந்த சிம்கார்டுக்கும் நெட்வொர்க் வசதி இல்லை. இதனால், இங்குள்ள மக்கள் அவசரத்திற்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், அணையையொட்டி யானை அதிகமாக நடமாடுவது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க முடியவில்லை என்றும் விபத்து நடந்தால்கூட 108 ஆம்புலன்ஸை அழைக்க முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தனர். மேலும், கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லை எனக்கூறிய மக்கள், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் புகார் கூறி உள்ளனர்.அதேபோல், மாணவர்கள் படிப்பு சம்மந்தமாக ஆன்லைனை பயன்படுத்துவதிலும் பிரச்சனை ஏற்படுவதாக கூறிய மக்கள், வெள்ள அபாய எச்சரிக்கை வந்தாலும் எந்த தகவலுமே அறிய முடியவில்லை எனக் கூறி உள்ளனர். மொத்தத்தில் போன் வைத்திருந்தும், கற்காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறிய மக்கள், செல்போன் டவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு, வம்சம் படத்தில் செல்போனில் டவர் கிடைக்கவில்லை என்பதற்காக மரத்தில் பேசுவதுபோன்ற காட்சி வைத்ததில்கூட ஒரு நியாயம் உள்ளது. காரணம், அந்தநேரத்தில் ஜெட்வேகத்தில் நெட் கிடைக்க 3G, 4G, 5G என எந்த ஜியும் இல்லை.ஆனால், தற்போதும் எந்த ஜியும் இல்லாமல் பாலாறு அணையையொட்டி உள்ள மக்கள் மரத்தின்மீதும், மாடிமீதும், ஊர்விட்டு ஊர் சென்றும், ”சரியா கேக்கல ஓவர்... ஓவர்... கொஞ்சம் வேறபக்கம் வந்து பேசுங்க ஓவர்... ஓவர்...” என செல்போனில் கத்திக் கொண்டிருப்பது தற்போதைய டெக்னாலஜிக்கு அழகா? என பலரும் கூறி வருகின்றனர்.அதேநேரம், காட்டுக்குள்ளும் டவர் கிடைக்கும் என யாராவது விளம்பரம் செய்யட்டும், அதன்பிறகு அவர்களின் காதை கடித்து துப்பிவிடுகிறேன் என, நடிகர் கஞ்சா கருப்பு போன்று திட்டியும் வருகின்றனர்.