எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணையும், கூட்டணியை பலப்படுத்துவோம் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில், செய்தியாளர்களைச் சந்தித்த இபிஎஸ் கூறியதாவது:திருப்பத்தூர் மாவட்டத்தில் 32 அமைப்பினருடன் கலந்துரையாடி, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தேன். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் சேர்க்கை குறைந்ததாக கூறி, அரசுப் பள்ளிகளை மூடியது திமுக அரசின் சாதனை. இதற்கு பதிலாக, தொடர்ந்து பள்ளிகளை நடத்த நடவடிக்கை எடுத்திருந்தால், பாராட்டி இருக்கலாம். இதில் உரிய கவனம் செலுத்தாத காரணத்தால், 207 பள்ளிகளை மூடியது வருத்தமளிக்கிறது. தற்போது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வைக்காதது தான் இந்த மோசமான நிலைக்கு காரணம். புதிய திட்டங்களுக்கு என தனிக்குழுவை அமைத்தார்கள். ஆனால் தனிக்குழு செயல்படவில்லை. திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி பெற்றால் மட்டும் தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். கட்சி விதிகளை மீறுபவர்களை நீக்குவதும், மீண்டும் இணைப்பதும் அரசியல் வரலாற்றில் புதிதல்ல.கூட்டணியை முடிவு செய்ய 8 மாத காலம் உள்ளது. அரசியல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் மட்டுமே பதில் தர முடியும். மேலும் பல்வேறு கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும். இவ்வாறு இபிஎஸ் தெரிவித்தார்.