தீபாவளி, சுப முகூர்த்த நிகழ்ச்சிகளை ஒட்டி பூக்கள் விலை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலர் சந்தைகளில் பூக்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் மிக முக்கிய இடம் வகிப்பது குமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை. இங்கு இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா மற்றும் வெளி நாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தின நிகழ்ச்சிகளையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று 1250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று 1800 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. அரளிப்பூ 450 ரூபாயாகவும், கிரேந்தி 100 ரூபாய்க்கும், ரோஸ் பன்னீர் 150 ரூபாய்க்கும், அரளி 450 ரூபாய்க்கும், செவ்வந்தி 350 ரூபாய்க்கும் வாடாமல்லி 300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணம். வரும் நாட்களில் மழை தொடர வாய்ப்புள்ளதால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.