உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க, கூண்டு வைத்த வனத்துறை, பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி, சுமார் 55% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதி யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களில் கிளன்ராக் குடியிருப்பு பகுதியில் 8 வளர்ப்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடி சென்றுள்ளதாகவும், மீண்டும் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை நடமாட்டம், சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் கிளன்ராக் குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் மட்டும் உலாவரும் சிறுத்தையை பிடிக்க கூண்டில் ஆடு கட்டப்பட்டு, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.