தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குலசை தசரா திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது முதல், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், வேப்பிலைகள், மாலைகளை ஆங்காங்கே விட்டுச் செல்வதால், கடற்கரை முழுவதும் குப்பைகளாக காட்சியளித்தது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் சமன் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.