ஜல்லிக்கட்டில் பிடிபடாத கொம்பன் காளை, இறந்து மூன்றாண்டுகள் ஆனாலும், நினைவஞ்சலி செலுத்திய கிராம மக்கள், சிலை வைத்து மணி மண்டபம் கட்ட முடிவு எடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், வடமத்தூர் அருகே உள்ளது மாத்தூர் கிராமம். இங்குள்ள நல்ல மணியாருடைய அய்யனார் கோயில் காளை கொம்பன். இந்த கொம்பன் காளையை இளம் கன்றாக கிராமத்து மக்கள் ஒன்றிணைந்து வாங்கி, கோயிலுக்கு விட்டனர். கிராம மக்களின் செல்லப் பிள்ளையாகவே இந்த காளை வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 36 வாடிவாசல் ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாமல் வெற்றிகளை மட்டுமே சூடி கிராமத்திற்கு பெயர் பெற்று தந்தது. ஊருக்கே பெருமை சேர்த்த கொம்பன் காளை, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது கிராமத்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, நல்லடக்கம் செய்த நிலையில், மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கொம்பனின் நினைவிடத்தில் சந்தனம் தெளித்து மாலை சூடி ஊர் மக்கள் ஒன்று திரண்டு வணங்கினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கொம்பன் காளைக்கென சிலை அமைக்கவும், மணிமண்டபம் கட்டவும் கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.