"யாமிருக்க பயமேன்" என்ற வாசகத்துடன், கர்நாடக பதிவெண்ட கொண்ட லாரியில், 176 கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். மதுரை, ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே, மதுரை மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அந்த லாரியில், ஆந்திராவில் இருந்து மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காகவும் கடற்கரை மூலமாக இலங்கைக்கு கடத்துவதற்காகவும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்ட 176 கிலோ கஞ்சா, மூட்டைகளில் பதுக்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.