கன்னியாகுமரி மாவட்டம், சிதறால் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே சிதறால் வட்டவிளையை சேர்ந்த 54 வயதான சத்ய மணி, தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். குளிக்க சென்றவரை காணாததால் உறவினர்கள், குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தாமிரபரணி ஆற்றில் தேடிப் பார்த்தபோது, குளித்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் புதர்களை பிடித்துக் கொண்டு, சத்யமணி சத்தமிட்டு கொண்டிருந்தார். உடனே, தீயணைப்பு வீரர்கள் அவரை உயிருடன் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். விரைந்து வந்து மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.