பழனியில், கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் இன்று தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். முருகப்பெருமானின் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பழனி மலைக் கோயிலில் உச்சி காலபூஜை முடிந்தவுடன் மூலவருக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வயானை, துவார பாலகர்கள், வீரபாகு, நவவீரர்கள் ஆகியோருக்கு காப்பு கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களும் காப்பு கட்டி கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கினர். காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 6ம் நாள் திருவிழாவான வருகிற 27ஆம் தேதியும், 28ஆம் தேதி சண்முகர் வள்ளி-தெய்வயானை சமேதருக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. அன்று கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது. கந்த சஷ்டியை முன்னிட்டு பழனியில் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். ஆன்மீக பாடல் பாடி புகழ்பெற்ற சிறுமி தியா, இன்று பழனி கோயிலில் முதன் முறையாக காப்பு கட்டி, முருகன் பாடல்கள் பாடி விரதத்தை துவங்கினார்.