கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததாக கொந்தளிக்கும் திமுக அரசு இதுவரை கோவை மக்களுக்கு என்ன செய்தது? என எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை 15 முறை கோவைக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்திருப்பதாக கூறி, மக்கள் பயனடைந்து வரும் திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளது.மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிய பின், ஒட்டுமொத்த தமிழக அரசியலும் கோவையை மையப்படுத்தியதே நடந்து வருகிறது.பாஜக ஆளும் சிறு மாநிலங்களுக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசு, தமிழகத்தை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கையாளுவதாக மாநிலம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக திமுக அரசு, கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்தித்து பேச தயார் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதியிருந்தார். ஆனால், திமுகவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த மத்திய பாஜக அரசு, திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை பட்டியலிட்டு விளக்கம் கொடுத்தது. அதோடு, கோவை மெட்ரோ ரயில் திட்ட நிராகரிப்பு விவகாரத்தில், திமுக அரசின் கவனக்குறைவே காரணம் என புகார் கூறியிருந்த இபிஎஸ், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2024ஆம் ஆண்டு தான் திமுக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்பியதாகவும் காட்டமாக விமர்சித்தார். அதுமட்டுமின்றி, தேர்தல் நெருங்குவதை அறிந்தே கோவை மக்களுக்காக துடிப்பதை போல் திமுக அரசு நடிப்பதாகவும், கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் கோவைக்கு எதுவும் செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சென்றன. எதிர்க்கட்சிகளின் புகார்களை பொய் என நிருபிக்கும் விதமாக, கோவை மாவட்ட வளர்ச்சியில் முதலமைச்சருக்கு பெரும் பங்கு இருப்பதாக குறிப்பிட்டு, கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்த பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டுள்ளது திமுக அரசு.குறிப்பாக, இதுவரை கோவைக்கு மட்டும் 15 முறை முதலமைச்சர் பயணம் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. அதிலும் நாடே முடங்கி இருந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி, வேறு எந்த முதல்வரும் செய்யாததை ஸ்டாலின், துணிச்சலுடன் செய்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளது.2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே கோவையில் முதலீட்டாளர்கள் முதல் முகவரி மாநாடு நடத்தி 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் கூறியுள்ளது. அதேபோல், 2023ல் விசைத்தறி சங்கங்களின் பாராட்டு விழா நடத்தியதுடன், அதே ஆண்டில் செம்மொழி பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டியதாக கூறியுள்ளது. மிக முக்கியமாக 2023ஆம் ஆண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தையும், 2024ஆம் ஆண்டு தமிழ் புதல்வன் திட்டத்தையும் கோவை மாவட்டத்தில் தான் முதல்வர் தொடங்கி வைத்ததாக தெரிவித்துள்ளது.இதேபோல், விளாங்குறிச்சியில் 158 கோடி செலவில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதி, அனுப்பர்பாளையத்தில் 300 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நூலகம், கொடிசியா வளாகத்தில் புத்தொழில் மாநாடு, தமிழகத்தின் மிக நீளமான ஜிடி நாயுடு மேம்பாலம் என மக்களின் தேவையை உணர்ந்து, அதற்கேற்ப பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்பாட்டிற்கும் கொண்டு வந்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளது.இதுமட்டுமின்றி பல மாநிலங்களும் தற்போது பின்பற்ற தொடங்கியிருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், கோவையில் சுமார் நான்கரை லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி, அவர்களின் வாழ்க்கையை மெருகேற்றி வருவதாகவும் பூரிப்படைந்து உள்ளது. இதேபோல், மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், நாளொன்றுக்கு சராசரியாக 3 லட்சத்து 86 ஆயிரம் மகளிர் பயணம் செய்வதாகவும், 36 ஆயிரம் மாணவ மாணவிகள் காலை உணவு திட்டத்தின் கீழ் பயனடைவதாகவும் தெரிவித்திருக்கிறது. அதோடு, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 70,304 கல்லூரி மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 56,610 கல்லூரி மாணவர்களும் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று உயர்கல்வி பயில உதவி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு கோவை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்திருப்பதாக கூறி, எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்துள்ளது திமுக அரசு.