கோவையில், Bumble என்ற டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று 3 சவரன் நகைகள், பணம் மற்றும் செல்போனை, திண்டுக்கல் டிஎஸ்பியின் மகன் பறித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மானத்திற்கு பயந்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்தில், தொடர்ந்து சேட்டையில் ஈடுபட்ட டிஎஸ்பியின் மகனை போலீசார் கைது செய்தனர். கட்டுமஸ்தான உடல், காண்போரை கவர்ந்திழுக்கும் காந்த பார்வை, காஸ்ட்லியான ஆடைகள் என, சமூக வலைதளத்தில் போட்டோக்களை வெளியிட்டு, பல பெண்களிடம் கேடிவேலை பார்த்த இந்த இளைஞர், தான் ஒரு டிஎஸ்பியின் மகன் என்பதாலேயே கூடுதல் ஆட்டம் ஆடி உள்ளாராம்.கோவை, ஏர்போர்ட் அருகே இரவில் காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதே நவம்பர் 2ஆம் தேதி கோவையிலேயே அதுவும் இரவு நேரத்திலேயே இன்னொரு இளம்பெண்ணுக்கும் சத்தமில்லாமல் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கடந்த 6 மாதமாக பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி ரேஸ்கோர்ஸில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், செல்போனில் Bumple என்ற டேட்டிங் ஆப் மூலம் கோவை, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதான தருண் என்ற இளைஞருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேரில் சந்திக்க வேண்டும் என இரவு 7.30 மணிக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார் தருண்.அதற்கு, சரி என தலையாட்டிய இளம்பெண் தான் தங்கி இருக்கும் ஹாஸ்டல் லொகேஷனை அனுப்பி வைத்துள்ளார். அந்த லொகேஷன்படி காரில் விரைந்து வந்தார் தருண்.தருண் அருகே காரின் முன்பக்கத்தில் அமர்ந்து அந்த இளம்பெண் பேசிக்கொண்டே இருந்த நிலையில், தமிழக-கேரள எல்லைப் பகுதியான க.க.சாவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே இரவு 8 மணிக்கு மேல் காரை நிறுத்தி உள்ளார் இளைஞர். இதையடுத்து மற்றொரு இளைஞரை செல்போனில் பேசி அங்கு வரவழைத்துள்ளார் தருண். அதன்பிறகு நடக்கப்போகிற விஷயம் அந்த இளம்பெண்ணே எதிர்பார்க்காத ஒன்று தான்.சிலநிமிடங்களில் அங்கு வந்த ஒரு இளைஞரும், தருணும் சேர்ந்து இளம்பெண் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுக்குமாறு மிரட்ட ஆரம்பித்தனர். தலா ஒரு சவரன் செயின், மோதிரம், பிரேசிலெட் மற்றும் செல்போன் ஆகியவற்றை இளம்பெண் கொடுத்த பின்பும் விடாத 2 இளைஞர்களும் அக்கவுண்டில் உள்ள பணத்தையும் அனுப்புமாறும் கூறி உள்ளனர்.இதையடுத்து, யூபிஐ மூலமாக தருணுக்கு 90,000 ரூபாயை அனுப்பி உள்ளார் இளம்பெண். அதன் பின்னர் அந்த இளம்பெண்ணை இரவு 10.45 மணியளவில் ஹாஸ்டலில் இறக்கிவிட வந்துள்ளார் தருண்.10 மணிக்கு மேல் ஹாஸ்டலுக்கு செல்ல அனுமதி இல்லை, அதனால் தான் அங்கு செல்ல முடியாது என கூறியதும் கோவை-அவிநாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ரூம் புக் செய்து அந்த இளம்பெண்ணை தங்க வைத்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார் தருண்.அதன் பின்னர் ஓட்டலில் உள்ள ஊழியர்களிடம் செல்போனை வாங்கி தனது அக்கா மற்றும் உறவினர்களிடம் நடந்த விவரத்தை கூறி உள்ளார் இளம்பெண். இதையடுத்து ஓட்டலுக்கு வந்த அக்கா, இளம்பெண்ணை அழைத்துச் சென்று ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வைத்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இளம்பெண்ணிடம் பணம் மற்றும் நகைகளை பறித்துச் சென்றது, திண்டுக்கல் சோஷியல் வெல்ஃபேர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கைப் பிரிவு டிஎஸ்பி தங்கப்பாண்டியனின் மகன், என்பது தெரியவந்தது.இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் தலைமறைவாக இருந்த தருணை கைது செய்தனர். ஈச்சனாரி பகுதியில் ஓட்டல் நடத்தி வந்த தருணுக்கு அதில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. அதனால், Bumple உள்ளிட்ட டேட்டிங் ஆப் மூலம் இளம்பெண்களை வலையில் வீழ்த்தி அவர்கள் மூலம் பணம் பார்க்கலாம் என கணக்குபோட்ட தருண், திருமணமான பெண்களையும்கூட விட்டுவைக்கவில்லை. அதற்காகவே சோஷியல் மீடியா PROFILE-ல் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு பெண்களை தன்வசம் இழுத்துள்ளார். மேலும், கோவை அரசு வழக்கறிஞருக்கு உதவியாளராக இருப்பதாகவும், தனது தந்தை காவல்துறையில் உயர் அதிகாரி எனவும் சீன்போட்டு, பெண்களை லாங் டிரைவிங் அழைத்து சென்று நகை, பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மானத்திற்கு பயந்தும், குடும்பத்திற்குள் ஏதாவது பிரச்சனை வந்துவிடும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வராததை தருண், தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பெண்களிடம் தனது சேட்டையை செய்து வந்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை சேகரித்து வரும் போலீசார், தருணின் நண்பரான இளைஞரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதையும் பாருங்கள் - மதுபோதை, பா*யல் சீண்டல், அரசு அதிகாரியின் தொடர் அத்துமீறல், இளம்பெண் புகாரால் அதிகாரி சஸ்பெண்ட்