‘டெல்டா விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி’ என்று, தஞ்சையில் கள ஆய்வு செய்த இபிஎஸ் வேதனை தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு வந்து குவித்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் லாரிகள் முறையாக இயக்கப்படாததால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் தேங்கியுள்ளது.மேலும், தொடர் மழையின் காரணமாக சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் 22 சதவீதம் அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ், இன்று தஞ்சாவூர் அருகே காட்டூர், மூர்த்தியம்பாள்புரம் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் இபிஎஸ் பேசியதாவது: விவசாயிகளின் துயர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசுக்கு வலியுறுத்துவேன். உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். நானும் ஒரு விவசாயி தான். அதனால் விவசாயிகள் படும் கஷ்டங்கள் எனக்கு அனைத்தும் தெரியும். விவசாயிகளின் கண்ணீர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், நேரடியாக விவசாயிகளிடம் கேட்டபோது வெறும் 800 நெல் மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது, எனவே, விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.