கும்பகோணத்தில் அமைச்சர் கோவி.செழியன் இருந்த மேடையிலேயே கூட்டுறவு சங்க அலுவலர் ஒருவர் மதுபோதையில் அபத்தமாக நடந்துகொண்டு முகம் சுழிக்க வைத்துள்ளார். பணம் புழங்கும் கூட்டுறவு சங்கத்தில் மதுபோதையில் எத்தனை கோளாறுகளை செய்து வைத்தாரோ? என கழுவி ஊற்றும் பொதுமக்கள், தற்காலிக பணியிடை நீக்கம் மட்டுமே சரியான பாடத்தை கற்பிக்காது என்றும் நிரந்தர பணி நீக்கமே மற்ற போதை அலுவலர்களுக்கும் பாடமாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் அமர்ந்திருக்கும் மேடையிலேயே, மது குடித்துவிட்டு இப்படி குறும்பு செய்கிறார் என்றால், தான் பணிபுரியும் இடத்தில் என்னென்ன செய்திருக்க மாட்டார்? என்பதே பலரது வருத்தம்.கும்பகோணத்தில் நடைபெற்ற 72ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் எம்எல்ஏக்கள் அன்பழகன், சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், மதுபோதையில் கலந்துகொண்ட தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் கள மேலாளராக பணியாற்றும் பட்டீஸ்வரத்தை சேர்ந்த 50 வயதான செல்வராஜ், மேடையில் நின்று கொண்டு செய்த சேட்டைகள் விழாவையே வீணாக்கியது. அமைச்சரும், எம்.எல்.ஏ.க்களும் பேசிக்கொண்டிருந்தபோது மேடைக்குக் கீழ் இருந்தவர்களிடம் தம்பஸ் அப் காட்டுவது, காதுகிழியும் அளவுக்கு சத்தத்துடன் கைகளை தட்டுவது, தேவையில்லாமல் சத்தமாக சிரிப்பது என இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை பார்த்து அமைச்சரும், அதிகாரிகளும் முகம் சுழிக்க, கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் செல்வராஜை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர் அதையெல்லாம் காதில் வாங்காமல் மேடையில்தான் உலா வந்தார்.ஒருகட்டத்தில் விழாவின் நோக்கமே சிதைந்ததால் செல்வராஜை வலுக்கட்டாயமாக மேடையில் இருந்து அறைக்குள் இழுத்து சென்றனர்.இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள், மது குடித்துவிட்டு சலம்பும் கூட்டுறவு அதிகாரி செல்வராஜ் அந்த பணியில் இருப்பதற்கே லாயக்கில்லை என திட்டி தீர்த்தனர்.அதோடு, விழா மேடையிலேயே மது குடித்துவிட்டு அபத்தமாக நடந்து கொள்ளும் அவர், பணி நேரத்தில் மட்டும் மது குடிக்காமல் இருந்திருப்பாரா? மது குடித்துவிட்டு, எத்தனை படிவங்களில் எத்தனை கையெழுத்துகளை தவறாக போட்டாரோ? எனவும் கழுவி ஊற்றினர்.கூட்டுறவு சங்கத்தின் மேற்பார்வை மற்றும் நிர்வாகம், நிதி கணக்குகளைச் சரிபார்த்தல், உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்தல், தேர்தல் பணிகளை நிர்வகித்தல் மற்றும் கூட்டுறவுச் சட்டங்களின்படி செயல்படுவதை உறுதி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை உள்ளடக்கியதுதான் கூட்டுறவு சங்க அலுவலரின் பணி. இவ்வளவு பொறுப்பான வேலைகளை மேற்கொள்ளும் செல்வராஜ் அவற்றை சரியாக தான் செய்திருப்பாரா? என கேள்வி மேல் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.இந்நிலையில், விசாரணை மேற்கொண்ட தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான பெரியசாமி, மதுபோதை அலுவலரான செல்வராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவரை நிரந்தர பணிநீக்கம் செய்தால்தான் மற்ற அரசு அதிகாரிகள் அதன் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.இதையும் பாருங்கள் - ஆதரவற்ற குழந்தைகளுடன் நடிகர் அருண் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் | ArunVijay | CharityBirthday