வேளாங்கண்ணியில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக, சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ரஜதகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா, 20 ஆண்டுக்குப் பின் விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில், இந்து - இஸ்லாமியர்களின் மத நல்லிணக்க ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக, ரஜதகிரீஸ்வரர் கோயிலுக்கு மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், பட்டுப்புடவை உள்ளிட்ட பல்வேறு வகையான மங்கல பொருட்களை வேளாங்கண்ணி முகமதியர் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து ரஜதகிரீஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். இஸ்லாமியர்களை இன்முகத்துடன் வரவேற்ற ரஜதகிரீஸ்வரர் ஆலய நிர்வாகிகள், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் யாகசால பூஜைக்கு சீர்வரிசையாக கொண்டு வரப்பட்ட நவதானியம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களை இஸ்லாமியர்கள் ஆலய நிர்வாகிகளிடம் வழங்கினர். அதன் பிறகு கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.