முன்னாள் மாணவர்களுக்கு டஃப் கொடுத்து நடனமாடிய முன்னாள் மாணவிகளால், மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி களை கட்டியது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் கே.எல்.கே.அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், 2005-2007ஆம் ஆண்டில், 11 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த சுமார் 400 மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் உள்ளூர், சென்னை, சென்னையின் புறநகர், வெளியூர் மற்றும் நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்ந்து வந்த மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். முன்னாள் மாணவ, மாணவியர் தங்களின் குடும்பத்துடன் பங்கேற்று ஒருவருக்கொருவர் உணவு பரிமாறி, நடனமாடி தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக, சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கணினி ஆய்வகத்தை புதுப்பித்த முன்னாள் மாணவர்கள் கணினி மற்றும் ஏ ஐ தொழில்நுட்பம் குறித்தான 110 புத்தகங்களை பள்ளி நூலகத்திற்கு பரிசாக வழங்கினார்கள்.