புதுக்கோட்டை அருகே கடலில் மிதந்து வந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆதிப்பட்டினம் மீனவ கிராமத்திலிருந்து நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போது, சுமார் 14 நாட்டிக்கல் மைல் தொலைவில், மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 47க்கும் மேற்பட்ட பொட்டலங்கள் கடலில் மிதந்து வருவதை கண்டனர். உடனே, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு குழுமத்தினர், கடலில் மிதந்த பொட்டலங்களை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்பு அதனை சோதனையிட்டதில் பொட்டலங்களில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து திருச்சிக்கு கொண்டு சென்றனர். படகு மூலம் கஞ்சா கடத்த முயன்று, நடுக்கடலில் கஞ்சா பொட்டலங்களை விட்டுச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.