வரும் ஒன்றாம் தேதி முதல், கோவை மாவட்டம் வால்பாறைக்கு, இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம், வார விடுமுறை நாட்களில் அதிகரித்து வரும் நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், இதனை தடுக்கும் விதமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், ”7ஆவது சொர்க்கம்” என்று அழைக்கக்கூடிய வால்பாறைக்கு, வெளி மாநிலத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இ-பாஸ் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், வால்பாறையில் போக்குவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தி உள்ளார். நவம்பர் 1ஆம் தேதி முதல், இ-பாஸ் மட்டுமின்றி, பிளாஸ்டிக் பொருள்கள், மது பாட்டில்கள் எடுத்து வரக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.