கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன் புதூரில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்தில், போதிய வசதியில்லாததால் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக உழவர்கள் வேதனையடைந்தனர். கொள்முதல் நிலையத்தில் உலர் இயந்திரம் இல்லாத காரணத்தால், தரையில் கொட்டி நெல்மணிகள் காய வைக்கப்படுவதாகவும், இதனால் கொள்முதல் பணிகள் தாமதமாக்கப்பட்டு நெல்மணிகள் சேதமாகும் நிலை நீடிப்பதாகவும் விவசாயிகள் வேதனையடைந்தனர். கொள்முதல் நிலையத்துக்கு எதிரே உள்ள மதுபான குடோன் சகல வசதிகளுடன் செயல்பட்டு மதுபான பாட்டில்கள் பாதுகாக்கப்படும் நிலையில், நெல்மணிகளை பாதுகாக்க எந்த வசதியும் இல்லை என விவசாயிகள் சாடியுள்ளனர். தோவாளை ஊராட்சிக்குட்பட்ட செண்பகராமன் புதூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, நெல் பயிர்கள் 17 சதவீதம் ஈரப்பதம் வரும் வரை தரையில் போட்டு உலர வைக்கும் சூழல் உள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் பயிர்களுக்காக, உலர் இயந்திரம் அமைக்கப்பட்டு விவசாயிகள் விளைவித்த நெல் பயிர்களை உடனடியாக உலர் இயந்திரத்தின் உதவியுடன் 17 சதவீதம் ஈரப்பதத்துடன் கொள்முதல் நிலையங்கள் நெல் மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.