மூன்று வெவ்வேறு வாகன விபத்து வழக்கில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, ஒரு கோடியே 94 லட்சம் ரூபாய் இழப்பீடு, லோக் அதாலத் நீதிமன்றத்தில் பெற்றுத் தரப்பட்டுள்ளது. மூன்று வழக்குகளும் முடிவுற்ற நிலையில், வாகன விபத்துகளில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு காசோலை வழங்கும் நிகழ்வு, பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும்,திருப்பூர் மாவட்ட பொறுப்பு நீதிபதியான ஜெகதீஷ் சந்திரா கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினார். அப்போது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசியதாவது:உலகில் உள்ள அனைத்து மதங்களும் சமாதானத்தை தான் போதிக்கிறது. தேசிய மக்கள் நீதிமன்றமும் சமரச முயற்சியை தான் மேற்கொள்கிறது. மக்களும் சமரச முடிவுக்கு வரவேண்டும். அதுவே சமுதாயத்திற்கு நல்லது. வழக்கறிஞர்களும் லோக் அதாலத் மூலம் வழக்குகள் விரைவில் முடிவடைவதால் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். வழக்குகள் இல்லாத நீதிமன்றம் என்ற சூழலை உருவாக்குவது சிறந்த சமுதாயமாக மாற உதவும். இவ்வாறு அவர் பேசினார்.