கோத்தகிரியில், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள மிஷன் காம்பவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் பதுங்கி பதுங்கி குடியிருப்பிற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, வளர்ப்பு நாயை வேட்டையாட முயற்சி செய்தது. அப்போது நாய் சத்தத்தை கேட்டு வீட்டின் உரிமையாளர் சத்தம் எழுப்பியதால் வாயில் கவ்விய நாயை அங்கேயே விட்டு சென்றது. ரத்த காயங்களுடன் நாய் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.