கரூர் மாவட்டம், சின்ன ரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமையலரை பணி நீக்கம் செய்த கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. அவர் சமைத்த உணவை சாப்பிடுவதற்கு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இத்தகைய நடவடிக்கையை அப்பள்ளியின் தலைமையாசிரியர் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. "சாதிகள் இல்லையடி பாப்பா" என சொல்லித் தரவேண்டிய பள்ளியிலேயே பட்டியலினத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக சமையலரை வேலையை விட்டு தூக்கிய கொடுமை அரங்கேறியுள்ளது. கரூர் மாவட்டம், சின்னரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், காலை உணவு திட்டத்தில் பெண் சமையலர் நான்கு மாதங்களாக பணியாற்றி வந்தார். பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் தலைமையாசிரியர் பானுமதிக்கு அவர் வேலை செய்வது பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. அவர் சமைத்தால் வேறு சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் உணவருந்துவதில்லை என்றும் அருவருக்கத்தக்க வகையில் தலைமையாசியர் பேசியதாக கூறப்படுகிறது. கடந்த 16ஆம் தேதி வழக்கம் போல் காலை சமையல் பணிக்கு சென்றபோது, வேறொரு பெண் பணி செய்து கொண்டிருந்ததை பார்த்து, அப்பெண்ணுக்கு தூக்கி வாரி போட்டுள்ளது.தலைமையாசிரியரிடம் பேசி பலனில்லை என புரிந்து கொண்ட அவர் தாந்தோணி வட்டார மகளிர் உரிமை திட்ட மேலாளர் சத்யாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, வேறொரு நபரை பணியில் நியமித்துவிட்டதாக பொறுப்பற்ற முறையில் கூறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் அவர் வர கூறியதன் பேரிலேயே, தோகைமலையில் உள்ள அலுவலகத்தில் விளக்கம் கேட்க சென்றபோது, ஒருநாள் முழுக்க அமரவைத்து தன்னை அலைக்கழிக்க வைத்ததாக அப்பெண் குற்றம்சாட்டினார். தனக்கு நேர்ந்த சாதிய கொடுமைக்கு நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். பள்ளி மாணவர்களின் பெற்றோர் வற்புறுத்தியிருந்தாலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னை வேலையை விட்டு தூக்கியதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என கண்ணீர் சிந்தினார். இதேபோல், வேலன் செட்டியூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், பட்டியலினத்தவர் சமைக்க கூடாது என கூறி, சமையலரை பணியை விட்டு தூக்கிய கொடுமை நிகழ்ந்த நிலையில், அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக பள்ளிக்குச் சென்று, பிரச்சனைக்கு தீர்வு கண்டார். அதனை போலவே இதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது. பிறப்பால் அனைவரும் சமம் என பாடம் நடத்த வேண்டிய தலைமை ஆசிரியருக்கு பாடம் புகட்ட வேண்டிய தேவையிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.நியூஸ் தமிழ் செய்திகளுக்காக குளித்தலை செய்தியாளர் சதீஷ்குமார்...