சட்ட விரோத இறால் பண்ணைகள் தொடர்பாக 2வது நாளாக ஆய்வு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யோகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள இறால் பண்ணைகளால் விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு வருவதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி சட்டவிரோத இறால் பண்ணைகளை முழுமையாக அகற்றி நடவடிக்கை எடுக்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார். ஆனால், பெயரளவில் அதிகாரிகள் ஆய்வு செய்வதாக, மீண்டும் யோகநாதன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதனையடுத்து நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி சட்டவிரோத இறால் பண்ணைகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர் பிரவீன்ராஜ் என்பவரை வழக்கறிஞர் ஆணையராக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதன்படி நேற்று, ஆணையர் பிரவீன்ராஜ் குழுவினர் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை ஆய்வு செய்த நிலையில், இன்று 2ஆவது நாளாக அதிகாரிகளுடன் ஆணையர் பிரவீன்ராஜ் ஆய்வு செய்தார்.