"வரும் ஐந்தாம் தேதி செய்தியாளர் சந்திப்பில் மனம் திறக்கிறேன்" என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறி இருப்பதாவது:செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அதிமுக அலுவலகத்தில் நான் மனம் திறந்து பேசப் போகிறேன். அப்போது நான் என்ன கருத்துக்களை பேசப் போகிறேன் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே, அதுவரை நீங்கள் பொறுத்திருந்து உதவி செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார். அப்போது, பல்வேறு கேள்விகளை எழுப்பியவாறே, அவரை பின் தொடர்ந்து செய்தியாளர்கள் சென்றனர். வரும் 5ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடைபெறுமா? என்று கேள்வி எழுப்பினர். உடனே செங்கோட்டையன், ’செய்தியாளர் சந்திப்பு மட்டுமே நடைபெறும்’ என்று கூறினார்.அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், செங்கோட்டையன் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் பண்ணை வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்தே, வரும் 5ம் தேதி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.