பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்தால் தான், அதிமுக ஆட்சி அமையும் என்ற செங்கோட்டையன் கருத்துக்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். வஉசி-யின் 154ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு போடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், அவரை வரவேற்றனர். அப்போது ஓபிஎஸ் கூறியதாவது:கட்சி உருவானதில் இருந்தே, அதிமுக தொடர்ச்சியாக 5 முறை தோல்வி கண்டது கிடையாது. அதிமுக பிரிந்து கிடப்பதால் தான் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொண்டர்களும் பல சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.அதிமுக, தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்தில் தொண்டர்களை யாராலும் வெளியேற்ற முடியாது. அதிமுக ஒருங்கிணைய வேண்டும். இதற்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்.மூத்த நிர்வாகி செங்கோட்டையன். அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் காலத்தில் இருந்தே மாவட்டச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வருகிறார். அதிமுகவுக்கு அவர் ஆற்றிய பணி அளப்பரியது. தொண்டர்களை ஒருங்கிணைத்து, அரவணைத்துச் செல்பவர்.செங்கோட்டையன் கருத்து சரிதான். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்தால் தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். அவருடைய எண்ணம் நிறைவேற வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். நாங்களும் அதற்காகத் தான் முயற்சி செய்கிறோம்.இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார். இதையும் கேளுங்கள்: செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்பேன் | OPS | Theni | Sengottaiyan