மதுரை தவெக மாநாட்டில், சிங்கத்தின் தனித்துவத்தைக் கூறி, கட்சித் தலைவர் விஜய், தனது உரையை தொடங்கினார். அவர் கூறியதாவது:ஒரு கானகத்தில் சிங்கம், புலி, நரி என்று பல்வேறு மிருகங்கள் இருந்தாலும் சிங்கம் தான் காட்டின் ராஜா. அந்த சிங்கம் வேட்டைக்குப் போனாலும் ‘சிங்கிளா’ தான் போகும். தன்னை விட பெரிய விலங்கைத் தான் வேட்டையாடும். அது தான் நம் நிலைப்பாடு.சிங்கம் எப்போதும் தனித்துவமானது. ஒரு சிங்கம் கர்ஜனை செய்தால், அந்த சத்தத்தில் 8 கிமீ வரை அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. அதிலும் கூட தன்னை விட பெரிய விலங்குகளை தான் குறி வைத்து தாக்கும், ஜெயிக்கும். எவ்வளவு பசியில் இருந்தாலும் உயிர் இல்லாததை, கெட்டுப் போனதை தொட்டுக் கூட பார்க்காது. அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு சுலபமாக எதையும் தொடாது, தொட்டால் விடாது. காட்டின் 4 பக்கமும் தனது எல்லையை தானே வகுக்கும். காட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டமாக இருக்கவும் தெரியும், தனியாக இருக்கவும் தெரியும். தனியாக வந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் அனைவருக்கும் "தண்ணி" காட்டும். எப்போதும் தனது தனித்தன்மையை இழக்காது.சிங்கத்தைப் பற்றி பேசிவிட்டு நமது சிங்கக் குட்டிகளையும், சிங்கப் பெண்களையும் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், அம்மாக்கள், அக்கா, தங்கைகள், நண்பர்கள் அனைவருக்கும் எனது உயிர் வணக்கம்...இவ்வாறு பேசி, தவெக தலைவர் விஜய், தமது உரையை தொடங்கினார்.