தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்களன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் வலுப்பெற்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 19ம் தேதி (நாளை) முற்பகல், தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை கடக்கக்கூடும்.மழை நிலவரம்:தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதேபோல், செவ்வாயன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். தொடர்ந்து, ஆகஸ்ட் 20 மற்றும் 23ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நிலவரம்:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.