உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாகவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை பெற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் புதிய மருத்துவமனை வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.