காஷ்மீர் லடாக்கில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் தாம்சன் உடல், சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, ஊர் மக்கள் மரியாதை செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த சேசுராஜ், அருள் மேரி தம்பதியின் முதல் மகன் தாம்சன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு தாம்சன் பணியில் இருந்தபோது, காஷ்மீர் லடாக் பகுதியில் சக ராணுவ வீரர்களுடன் ராணுவ வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, மலையில் ஏற்பட்ட சரிவினால் பாறை ஒன்று உருண்டு வந்து, ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தாம்சனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர், லடாக்கில் உள்ள ராணுவ மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக கோல்கட்டா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தாம்சனுக்கு ஊட்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்தார். அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்த ஊரான சிறுநாயக்கன்பட்டிக்கு கொண்டு வந்தனர். தாம்சனின் உடலுக்கு ராணுவத்தினரும் சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்களும் கண்ணீருடன் மரியாதை செலுத்தினர்.