தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது என்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற குமரி மண்டல பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், அமித்ஷா பேசியதாவது: இந்த புண்ணிய பூமியான தமிழகத்தில், தமிழில் பேச முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த மண் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. வீரம், பண்பாடு, கலாசாரம் மிக்கது. இந்த தமிழ் மண்ணை வணங்கி உரையை துவக்குகிறேன். நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன், பாஜகவுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தார். அவரை வணங்குகிறேன்.பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர் நட்டாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த மண்ணைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். தேஜ கூட்டணி ஆட்சியின் போது தான் தமிழகத்தை சேர்ந்த அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.தகுதி நீக்க மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. பிரதமர், முதல்வர் யாராக இருந்தாலும், அவர்கள் சிறை செல்ல நேரிட்டால் அவர்கள் பதவியில் தொடரக்கூடாது. தமிழக அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, பொன்முடி பல மாதங்கள் சிறையில் இருந்துள்ளனர். சிறையில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா? ஜெயிலில் இருந்து ஆட்சி நடத்த முடியுமா?இந்த மசோதாவை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். இது கருப்பு சட்டம் என சொல்கிறார். இதனை சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரமில்லை, உரிமையில்லை. வருங்காலத்தில் பாஜக, அதிமுக கூட்டணியான தேஜ கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் 18 சதவீதத்துக்கு மேல் ஓட்டு வாங்கினோம். அதிமுக 21 சதவீத ஓட்டு வாங்கியிருந்தார்கள். இரண்டையும் கூட்டினாலே 39 சதவீத ஓட்டுக்களை எளிதாக பெற்று விடுவோம்.தேஜ கூட்டணி அரசியல் கூட்டணி இல்லை. தமிழகத்தை வளர்ச்சி அடைய செய்ய மக்களை முன்னேற்றுவதற்கான கூட்டணி. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வேருடன் பிடுங்கி எறிய வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.