நெல்லை, பொருநை அருங்காட்சியகத்தின் புல்வெளி பாறையில் 'ராம்' என்று இந்தியில் எழுதப்பட்டது சர்ச்சையை கிளப்பிய சூழலில், பெயிண்ட் கொண்டு, அந்த வார்த்தையை பணியாளர்கள் அழித்துள்ளனர்.வரலாறு இல்லாதவர்கள், பிறர் வரலாற்றை அழிப்பதும் திருடுவதும் தான் வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் தான் தமிழர்களின் வரலாற்றை விளக்கும் பொருநை அருங்காட்சியகத்தில், வடமாநிலத்தவர்கள் செய்த வேண்டாத வேலை.தென் தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் அகழாய்வு செய்யப்பட்ட பழங்கால பொருட்கள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழர் நாகரிகத்தையும் தொன்மையையும் உலகிற்கு பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று மாலை திறந்து வைக்க இருக்கிறார். இந்நிலையில், அகழாய்வின் போது கிடைக்கப்பெற்ற பாறைகள், அருங்காட்சியக வளாகத்தில் ஆங்காங்கே அழகுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த பாறைகளில் கண்ணை கவரும் வகையில் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்ற நிலையில், அந்த பணிகள் அனைத்தும் வடமாநிலத்தவர்களை கொண்டே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனிடையே, அங்கு பணியில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆர்வக் கோளாறில், தமிழர் பெருமையை விளக்கும் பாறையில், ராம் என்பதை குறிக்கும் இந்தி வார்த்தையை எழுதிவைத்ததாக தெரிகிறது.இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து, தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்த மண்ணில் இப்படி ஒரு சம்பவமா? என தமிழ் ஆர்வலர்கள் கொதித்தெழ தொடங்கினர். இதையடுத்து, பதறிப்போன அருங்காட்சியக நிர்வாகிகளும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பாறையில் இந்தி எழுத்து எழுதியது யார்? என விசாரணை நடத்தினர். இதையடுத்து, பணியாளர்களை கொண்டு இந்தி எழுத்து வர்ணம் பூசி அழிக்கப்பட்டது.