கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மகளிர் தங்கும் விடுதியின் குளியல் அறையில், ரகசிய கேமரா வைத்ததை அறிந்து பெண் தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, ரகசிய கேமரா வைத்ததாக, வட மாநில பெண் தொழிலாளியை கைது செய்த போலீஸார், உடந்தையாக இருந்த அவரது ஆண் நண்பரை வலைவீசி தேடி வருவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ராயக்கோட்டை வன்னியபுரம் கிராமத்தில் ஐபோன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பெண் தொழிலாளர்கள் தங்குவதற்கு, லாளிக்கல் என்கிற இடத்தில், விடியல் ரெசிடென்ஸி என்கிற பெயரில் 11 பிளாக்குகள் கொண்ட அடுக்குமாடி விடுதி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த விடுதியின் 4ஆவது பிளாக்கில், வடமாநில பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள ஒரு அறையில் தான் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, தொழிற்சாலை நிர்வாகத்திடம் புகார் அளித்த தொழிலாளர்கள், திடீரென செவ்வாய்க்கிழமை மாலை விடுதி முன்பு குவிந்து போராட்டத்தில் குதித்தனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்ததால், விடுதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.ஒசூர் சார்ஆட்சியர் அக்ரிதி சேத்தி, மாவட்ட எஸ்பி தங்கதுரை, கூடுதல் எஸ்பி சங்கர் மற்றும் அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், ரகசிய கேமரா வைத்த நபரை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று, தொழிலாளர்கள் கறாராகக் கூறி விட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனிடையே, ரகசிய கேமரா வைத்ததாக, சந்தேகத்தின் பேரில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி குப்தா என்கிற 23 வயது இளம்பெண் தொழிலாளியை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது, ரகசிய கேமரா வைத்ததை ஒப்புக்கொண்ட அவர், பெங்களூருவில் உள்ள தனது காதலனுக்காக வைத்ததாகவும், கேமராவில் பதிவாகும் வீடியோக்களை அவருக்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, நீலுகுமாரி குப்தாவை கைது செய்த போலீசார், பெங்களூருவில் உள்ள அவரது ஆண் நண்பர் சந்தோஷை பிடிக்க விரைந்தனர். அதேசமயம், விடுதியின் வேறு ஏதேனும் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து 100 பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில், வேறு எந்த அறையிலும் ரகசிய கேமரா வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. அதேபோல, வடமாநில பெண் தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ரகசிய கேமராவிலும் எவ்வித வீடியோக்களும் பதிவாகவில்லை எனவும், சமூக வலைதளங்களில் பகிரப்படவும் இல்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.எனினும், ரகசிய கேமரா குறித்து தகவல் அறிந்து அச்சமடைந்த தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பெண் தொழிலாளர்களின் பெற்றோர், விடுதிக்கு வந்து தங்களது மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையும் பாருங்கள் - குளியல் அறையில் ரகசிய கேமரா, மகளிர் தங்கும் விடுதியில் அதிர்ச்சி, பெண் தொழிலாளர்கள் போராட்டம்